"கலைஞர் டிவி' அலுவலகத்தில் ரெய்டு !!

"ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தில் கைது செய்யப்பட்டவரிடம் பணம் பெற்ற விவகாரம் தொடர்பாக, சென்னை அறிவாலயத்தில் உள்ள ஆளுங்கட்சியின், "கலைஞர் டிவி' அலுவலகத்தில், சி.பி.ஐ., ரெய்டு நடத்தி, ஆவணங்களை அள்ளிச் சென்றது.
தொலைத் தொடர்புத் துறையின், "ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவிற்குப் பின், சி.பி.ஐ., பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். ஸ்வான் நிறுவனத்தின் ஷாகித் உஸ்மான் பல்வாவையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்நிலையில், ஸ்வான் நிறுவனத்தின் துணை நிறுவனமான சினியுக் மூலம் 200 கோடி ரூபாய், தி.மு.க.,வின் சொந்த "டிவி'யான "கலைஞர் டிவி'க்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ள தகவல் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக, சி.பி.ஐ., எந்த நேரமும் விசாரணை அல்லது ரெய்டு நடத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில், "கலைஞர் டிவி'யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார், "ஸ்பெக்ட்ரம் விவகாரத்திற்கும், 2009ல் "கலைஞர் டிவி' மற்றும் சினியுக் நிறுவனத்திற்கும் இடையில் இருந்த கடன் பரிவர்த்தனைக்கும் எந்த தொடர்பும் கிடையாது, கடனாகப் பெற்ற பணத்தை வட்டியுடன் திருப்பிக் கொடுத்து விட்டோம்' என்றார். "இது தொடர்பாக சந்தேகம் இருந்தால் எப்போது வேண்டுமானாலும், "கலைஞர் டிவி' நிறுவன ஆவணங்களை சோதனையிடலாம்' என்றும் அறிவித்தார். இந்த பரபரப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் இரவு சி.பி.ஐ., அதிகாரிகள், "கலைஞர் டிவி' அலுவலகத்தில் நுழைந்து சோதனை நடத்திச் சென்றுள்ளனர். சி.பி.ஐ., கோர்ட்டில் அனுமதி பெற்று இரண்டு பிரிவாக சி.பி.ஐ., அதிகாரிகள் சென்னை வந்தனர்.
கூடுதல் டி.எஸ்.பி., ஒருவர் தலைமையில், இரவு 8:30 மணிக்கு, சென்னை வந்திறங்கிய முதல் குழு, சென்னையில் உள்ள சி.பி.ஐ., அதிகாரி ஒருவர் துணையுடன், உடனே தேனாம்பேட்டை, அண்ணாசாலையில், "கலைஞர் டிவி' அலுவலகம் அமைந்துள்ள அறிவாலய வளாகத்திற்குள் நுழைந்தது. இவர்கள் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட, "கலைஞர் டிவி' நிர்வாகிகளில் ஒருவரான அமிர்தம், நிர்வாக இயக்குனர் சரத்குமார், துணை தலைவர் ஹுமாயூன் ஆகியோர், அதிகாரிகளிடம் பேசி, தற்போது ரெய்டு நடத்தினால், இதர மீடியாக்களுக்கு தகவல் தெரிந்து பிரச்னையாகிவிடும் என்பதால், இரவு 11 மணிக்கு வருமாறு கூறி அனுப்பியதாக கூறப்படுகிறது. இரண்டாவது குழு டில்லியில் இருந்து வந்தது. டில்லி அதிகாரிகள் ஐந்து பேர் மற்றும் சென்னை அதிகாரிகள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சி.பி.ஐ., அதிகாரிகள், "கலைஞர் டிவி' அலுவலகத்திற்குள் இரவு 11:30 மணிக்கு உள்ளே நுழைந்தனர். அதே நேரத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும் அங்கு வந்தார். ரெய்டு விவகாரம் கேள்விப்பட்டு, மற்ற மீடியாக்கள் வந்துவிடக் கூடாது என்பதற்காக, அறிவாலய வளாகத்தை சுற்றிலும், கமாண்டோ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முதலில், சி.பி.ஐ., அதிகாரிகள், அனைவரது மொபைல் போன்களையும் வாங்கி வைத்துக் கொண்டதுடன், அலுவலக போன்களையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். பின், அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தியதுடன், அலுவலகம் தொடர்பான அனைத்து தகவல்களையும் அங்கிருந்தவர்களிடம் கேட்டு பதிவு செய்ததுடன், அதற்கான ஆவணங்களையும் தங்கள் வசமாக்கிக் கொண்டனர். சி.பி.ஐ., அதிகாரிகள், "கலைஞர் டிவி' அலுவலகத்திற்கு வழங்கப்படும் வாடகை, ஊழியர்கள் சம்பளம், வருவாய் தொடர்பான கேள்விகளையும் நிர்வாகிகளிடம் கேட்டுள்ளனர். மேலும், பல முக்கிய ஆவணங்களை சி.பி.ஐ., அதிகாரிகள் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. இரவு 11:30க்கு துவங்கி, காலை 5:30 மணி வரை முழுமையாக சோதனையிட்ட அதிகாரிகளில் சிலர், ஆவணங்களை ஒரு காரில் ஏற்றிக் கொண்டு, நேராக விமான நிலையம் சென்று, டில்லி புறப்பட்டனர். மீதமுள்ளவர்கள், நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்திற்கு வந்து, தங்கள் பணிகளை முடித்துவிட்டு, அடுத்த விமானத்தில் டில்லி புறப்பட்டுச் சென்றனர். சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு, பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தி.மு.க.,வின் தலைமை அலுவலகமான அறிவாலயத்திற்குள்ளேயே சி.பி.ஐ., நுழைந்துள்ளதை அடுத்து, அடுத்த, "டார்கெட்' யார் என்ற பதட்டத்தில் தி.மு.க., வட்டாரம் தவித்து வருகிறது.
கண்துடைப்பா? : தங்களுடன் கூட்டணியில் இருக்கும் தி.மு.க., தலைவரின் குடும்ப, "டிவி'யான "கலைஞர் டிவி'யில் சி.பி.ஐ., ரெய்டு நடத்தியிருப்பது, தி.மு.க.,வை தங்கள் பிடியில் வைத்திருக்க, மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி நடத்தும் நாடகம் என்று ஒருபுறம் பேசப்படுகிறது. மேலும், "கலைஞர் டிவி' நிர்வாகம், அறிக்கை விட்ட பின், சி.பி.ஐ., வந்துள்ளதால் கண்துடைப்பிற்காக ரெய்டு நடத்தப்பட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.
நேரத்தை மாற்றிய சி.பி.ஐ.,; கலங்கியது "கலைஞர் டிவி': சி.பி.ஐ., ரெய்டு என்றாலே, பொதுவாக, எப்படி இருக்குமோ, என்ன கேட்பார்களோ? என்ற கலக்கம் இருக்கும். ஆனால், "கலைஞர் டிவி' நிர்வாகம் எப்போது வேண்டுமானாலும், வந்து சோதனை நடத்தலாம் என்று வலிய வந்து தெரிவித்திருந்தாலும், எப்போது வருவார்களோ, என்ற பயம் அவர்களிடத்திலும் இருந்ததாக கூறப்படுகிறது. பொதுவாக, சி.பி.ஐ., அதிகாரிகள் காலை நேரத்தில் தங்கள் ரெய்டை துவக்குவது வழக்கம் என்பதால், ஒரு வேளை நேற்று காலை சி.பி.ஐ., அதிகாரிகள் வரலாம் என, "கலைஞர் டிவி' நிர்வாகம் நினைத்துள்ளது. ஆனால், நேற்று முன்தினம் இரவே திடீரென அதிகாரிகள் விசிட் சென்றது, "கலைஞர் டிவி' வட்டாரத்தை கலங்கடித்துள்ளது. அதன் பின்பே, மீடியாவை காரணம் காட்டி, அவர்களை 11 மணிக்கு வரச்சொல்லி அனுப்பியுள்ளனர். மற்ற இடங்களில் அதிரடியாக நுழைந்து நடவடிக்கை எடுக்கும் சி.பி.ஐ., காலம் தாழ்த்தி மீண்டும் வந்ததன் பின்னணியில் மர்மம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
"சம்மன் வரவில்லை': சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த மாற்றுத் திறனாளிகள் நல வாரியக் கூட்டத்தில், கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும், நிருபர்களின் கேள்விகளுக்கு கனிமொழி அளித்த பதில்:
* சி.பி.ஐ.,யிடம் இருந்து உங்களுக்கு சம்மன் வந்துள்ளதா?
இதுவரை எதுவும் எனக்கு வரவில்லை.
இதுவரை எதுவும் எனக்கு வரவில்லை.
* "கலைஞர் டிவி'யில் சி.பி.ஐ., சோதனை நடத்தியது குறித்து?
அதுபற்றி தெரியாது.
அதுபற்றி தெரியாது.
* இந்த ரெய்டுகள், தி.மு.க., - காங்., இடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில்
சிக்கலை ஏற்படுத்துமா?
அதுபற்றி எனக்கு தெரியாது. இவ்விஷயத்தில் பதில் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.
சிக்கலை ஏற்படுத்துமா?
அதுபற்றி எனக்கு தெரியாது. இவ்விஷயத்தில் பதில் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.













