ஒரு பிறந்த நாளும், அதன் பொருளும்.
சில மனிதர்களை நாம் சந்தித்திருக்கவே மாட்டோம், ஆனால் நம் வாழ்க்கையில்அவர்கள் ஒரு பகுதியாக நிறைந்து கிடப்பார்கள், சில மனிதர்களிடம் நாம் பேசியிருக்கவே
மாட்டோம், ஆனால் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு சொற்களிலும் அவர்கள் எதிரொலிப்பார்கள், தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்கிற முனைப்பும், வீரியமும் நிறைந்த மனிதர்களிடையே அரிதாக அவ்வப்போது சில உண்மையான மனிதர்களை நாம் சந்திக்க நேரிடும், அப்படி ஒரு
மனிதர் திரு.ராமசுப்ரமணியன்.
வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சியை அதிகம் பேசாமல் செயல்படுகிற
இவரைப் போன்ற சில மனிதர்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது,
மனிதம் என்பதும் அன்பு என்பதும் பொருளையும், முகங்களையும் தாண்டியது
என்கிற எளிய உண்மையை ஒரு முகம் தெரியாத சின்னஞ்சிறு குழந்தைக்காக
அவர் அள்ளிக் கொடுத்த பொருளில் இருந்து நான் தேடிக் கண்டு கொண்டேன்.
அந்தக் குழந்தை இன்று இவ்வுலகில் இல்லை, ஆனால், பல முகம் தெரியாத
மனிதர்கள் என் வலியைப் பகிர்ந்து கொள்ள இந்த உலகில் இருக்கிறார்கள் என்று
அந்தக் குழந்தை அறிந்து கொண்டுதான் விடைபெற்றது, உங்கள் உழைப்பையும்,
அன்பையும் பெற்றுக் கொண்ட அந்தக் குழந்தையின் ஆழ்மனம் உங்கள் தலைமுறையும், நீங்களும் நலமாய் வாழ வேண்டும் என்று உறுதியாக வாழ்த்தும்.
அந்தக் குழந்தையின் புன்னகை உங்கள் குழந்தைகளின் உள்ளத்தில் மலரும்.
வழக்கமாய் வாழ்த்த என்னிடம் சொற்கள் இல்லை, மகிழ்ச்சி நிரம்பிய கண்ணீருடனும், மிகுந்த அன்புடனும் உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்வதில் நிறைவடைகிறேன் ராமசுப்ரமணியன்.
உங்கள் பிறந்த நாளில் மனிதம் தழைக்கட்டும். மழையும்,
கருணையும் பொழியட்டும் இந்த பூமியில்...........
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி : கை.அறிவழகன் -----------------------------------------------------------------------------------------------------------------------------------
