gravatar

"கலைஞர் டிவி' அலுவலகத்தில் ரெய்டு !!


"ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தில் கைது செய்யப்பட்டவரிடம் பணம் பெற்ற விவகாரம் தொடர்பாக, சென்னை அறிவாலயத்தில் உள்ள ஆளுங்கட்சியின், "கலைஞர் டிவி' அலுவலகத்தில், சி.பி.ஐ., ரெய்டு நடத்தி, ஆவணங்களை அள்ளிச் சென்றது.

தொலைத் தொடர்புத் துறையின், "ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவிற்குப் பின், சி.பி.ஐ., பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். ஸ்வான் நிறுவனத்தின் ஷாகித் உஸ்மான் பல்வாவையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்நிலையில், ஸ்வான் நிறுவனத்தின் துணை நிறுவனமான சினியுக் மூலம் 200 கோடி ரூபாய், தி.மு.க.,வின் சொந்த "டிவி'யான "கலைஞர் டிவி'க்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ள தகவல் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக, சி.பி.ஐ., எந்த நேரமும் விசாரணை அல்லது ரெய்டு நடத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில், "கலைஞர் டிவி'யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார், "ஸ்பெக்ட்ரம் விவகாரத்திற்கும், 2009ல் "கலைஞர் டிவி' மற்றும் சினியுக் நிறுவனத்திற்கும் இடையில் இருந்த கடன் பரிவர்த்தனைக்கும் எந்த தொடர்பும் கிடையாது, கடனாகப் பெற்ற பணத்தை வட்டியுடன் திருப்பிக் கொடுத்து விட்டோம்' என்றார். "இது தொடர்பாக சந்தேகம் இருந்தால் எப்போது வேண்டுமானாலும், "கலைஞர் டிவி' நிறுவன ஆவணங்களை சோதனையிடலாம்' என்றும் அறிவித்தார். இந்த பரபரப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் இரவு சி.பி.ஐ., அதிகாரிகள், "கலைஞர் டிவி' அலுவலகத்தில் நுழைந்து சோதனை நடத்திச் சென்றுள்ளனர். சி.பி.ஐ., கோர்ட்டில் அனுமதி பெற்று இரண்டு பிரிவாக சி.பி.ஐ., அதிகாரிகள் சென்னை வந்தனர்.

கூடுதல் டி.எஸ்.பி., ஒருவர் தலைமையில், இரவு 8:30 மணிக்கு, சென்னை வந்திறங்கிய முதல் குழு, சென்னையில் உள்ள சி.பி.ஐ., அதிகாரி ஒருவர் துணையுடன், உடனே தேனாம்பேட்டை, அண்ணாசாலையில், "கலைஞர் டிவி' அலுவலகம் அமைந்துள்ள அறிவாலய வளாகத்திற்குள் நுழைந்தது. இவர்கள் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட, "கலைஞர் டிவி' நிர்வாகிகளில் ஒருவரான அமிர்தம், நிர்வாக இயக்குனர் சரத்குமார், துணை தலைவர் ஹுமாயூன் ஆகியோர், அதிகாரிகளிடம் பேசி, தற்போது ரெய்டு நடத்தினால், இதர மீடியாக்களுக்கு தகவல் தெரிந்து பிரச்னையாகிவிடும் என்பதால், இரவு 11 மணிக்கு வருமாறு கூறி அனுப்பியதாக கூறப்படுகிறது. இரண்டாவது குழு டில்லியில் இருந்து வந்தது. டில்லி அதிகாரிகள் ஐந்து பேர் மற்றும் சென்னை அதிகாரிகள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சி.பி.ஐ., அதிகாரிகள், "கலைஞர் டிவி' அலுவலகத்திற்குள் இரவு 11:30 மணிக்கு உள்ளே நுழைந்தனர். அதே நேரத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும் அங்கு வந்தார். ரெய்டு விவகாரம் கேள்விப்பட்டு, மற்ற மீடியாக்கள் வந்துவிடக் கூடாது என்பதற்காக, அறிவாலய வளாகத்தை சுற்றிலும், கமாண்டோ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முதலில், சி.பி.ஐ., அதிகாரிகள், அனைவரது மொபைல் போன்களையும் வாங்கி வைத்துக் கொண்டதுடன், அலுவலக போன்களையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். பின், அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தியதுடன், அலுவலகம் தொடர்பான அனைத்து தகவல்களையும் அங்கிருந்தவர்களிடம் கேட்டு பதிவு செய்ததுடன், அதற்கான ஆவணங்களையும் தங்கள் வசமாக்கிக் கொண்டனர். சி.பி.ஐ., அதிகாரிகள், "கலைஞர் டிவி' அலுவலகத்திற்கு வழங்கப்படும் வாடகை, ஊழியர்கள் சம்பளம், வருவாய் தொடர்பான கேள்விகளையும் நிர்வாகிகளிடம் கேட்டுள்ளனர். மேலும், பல முக்கிய ஆவணங்களை சி.பி.ஐ., அதிகாரிகள் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. இரவு 11:30க்கு துவங்கி, காலை 5:30 மணி வரை முழுமையாக சோதனையிட்ட அதிகாரிகளில் சிலர், ஆவணங்களை ஒரு காரில் ஏற்றிக் கொண்டு, நேராக விமான நிலையம் சென்று, டில்லி புறப்பட்டனர். மீதமுள்ளவர்கள், நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்திற்கு வந்து, தங்கள் பணிகளை முடித்துவிட்டு, அடுத்த விமானத்தில் டில்லி புறப்பட்டுச் சென்றனர். சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு, பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தி.மு.க.,வின் தலைமை அலுவலகமான அறிவாலயத்திற்குள்ளேயே சி.பி.ஐ., நுழைந்துள்ளதை அடுத்து, அடுத்த, "டார்கெட்' யார் என்ற பதட்டத்தில் தி.மு.க., வட்டாரம் தவித்து வருகிறது.
கண்துடைப்பா? : தங்களுடன் கூட்டணியில் இருக்கும் தி.மு.க., தலைவரின் குடும்ப, "டிவி'யான "கலைஞர் டிவி'யில் சி.பி.ஐ., ரெய்டு நடத்தியிருப்பது, தி.மு.க.,வை தங்கள் பிடியில் வைத்திருக்க, மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி நடத்தும் நாடகம் என்று ஒருபுறம் பேசப்படுகிறது. மேலும், "கலைஞர் டிவி' நிர்வாகம், அறிக்கை விட்ட பின், சி.பி.ஐ., வந்துள்ளதால் கண்துடைப்பிற்காக ரெய்டு நடத்தப்பட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.
நேரத்தை மாற்றிய சி.பி.ஐ.,; கலங்கியது "கலைஞர் டிவி': சி.பி.ஐ., ரெய்டு என்றாலே, பொதுவாக, எப்படி இருக்குமோ, என்ன கேட்பார்களோ? என்ற கலக்கம் இருக்கும். ஆனால், "கலைஞர் டிவி' நிர்வாகம் எப்போது வேண்டுமானாலும், வந்து சோதனை நடத்தலாம் என்று வலிய வந்து தெரிவித்திருந்தாலும், எப்போது வருவார்களோ, என்ற பயம் அவர்களிடத்திலும் இருந்ததாக கூறப்படுகிறது. பொதுவாக, சி.பி.ஐ., அதிகாரிகள் காலை நேரத்தில் தங்கள் ரெய்டை துவக்குவது வழக்கம் என்பதால், ஒரு வேளை நேற்று காலை சி.பி.ஐ., அதிகாரிகள் வரலாம் என, "கலைஞர் டிவி' நிர்வாகம் நினைத்துள்ளது. ஆனால், நேற்று முன்தினம் இரவே திடீரென அதிகாரிகள் விசிட் சென்றது, "கலைஞர் டிவி' வட்டாரத்தை கலங்கடித்துள்ளது. அதன் பின்பே, மீடியாவை காரணம் காட்டி, அவர்களை 11 மணிக்கு வரச்சொல்லி அனுப்பியுள்ளனர். மற்ற இடங்களில் அதிரடியாக நுழைந்து நடவடிக்கை எடுக்கும் சி.பி.ஐ., காலம் தாழ்த்தி மீண்டும் வந்ததன் பின்னணியில் மர்மம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

"சம்மன் வரவில்லை': சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த மாற்றுத் திறனாளிகள் நல வாரியக் கூட்டத்தில், கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும், நிருபர்களின் கேள்விகளுக்கு கனிமொழி அளித்த பதில்:

சி.பி.ஐ.,யிடம் இருந்து உங்களுக்கு சம்மன் வந்துள்ளதா?
இதுவரை எதுவும் எனக்கு வரவில்லை.

* "கலைஞர் டிவி'யில் சி.பி.ஐ., சோதனை நடத்தியது குறித்து?
அதுபற்றி தெரியாது.

* இந்த ரெய்டுகள், தி.மு.க., - காங்., இடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் 
சிக்கலை ஏற்படுத்துமா?
அதுபற்றி எனக்கு தெரியாது. இவ்விஷயத்தில் பதில் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.

gravatar

சுவிஸ் வங்கி கருப்பு பணம் அள்ளப்போவது யார் ?


சுவிஸ் வங்கிகளில் புதையலாக குவிந்துள்ள கருப்புப் பணம் முன்பு எப்போதும் இல்லாத அளவில், இந்த தேர்தலில் தேசிய கட்சிகளுக்கு முக்கிய அரசியல் பிரச்னையாக மாறியுள்ளது.

“கோடிக்கணக்கான ரூபாய் கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கவில்லை’ என்று பா.ஜ., தலைவர் அத்வானியும், “மத்தியில் பா.ஜ., ஆட்சியில் இருந்த போது அதை செய்திருக்கலாமே’ என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த தேர்தலில் இப்பிரச்னையை முதலில் முன்வைக்க, பத்திரிகையாளர்கள் கூட்டத்துக்கு அத்வானி கடந்த மார்ச் 29ம் தேதி ஏற்பாடு செய்தார். அப்போது இது குறித்து தெரிவித்த அவர், “”சுவிஸ் வங்கியில் குவிந்துள்ள கோடிக்கணக்கான கருப்புப் பணத்தை இந்தியா கொண்டு வந்தால் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தலாம். கருப்புப்பணத்தை கொண்டுவர முயற்சி செய்யாத காங்கிரஸ் கட்சியை இந்த தேர்தலில் தண்டிக்க வேண்டும். பா.ஜ., மத்தியில் ஆட்சி அமைத்தால் இப்பணத்தை இந்தியா கொண்டு வர முயற்சி செய்வோம்,” என்று கூறியிருந்தார்.

வருமான கணக்குக் காட்டுவதிலிருந்து தப்பிக்கவும், வரி மோசடி செய்வதற்காகவும் ஏராளமானோர் கருப்புப்பணத்தை சுவிஸ் வங்கிகளில் முறைகேடாக முதலீடு செய்துள்ளனர். குற்றவாளிகளின் பணம்: இதுதவிர கொலை, கொள்ளை, பயங்கரவாதம் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளோரின் பணமும் இங்கு குவிந்துள்ளது. இதன் மதிப்பு தற்போது ரூ.25 லட்சம் கோடியிலிருந்து ரூ.75 கோடி வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சுவிட்சர் லாந்தில், 200 க்கும் மேற்ப்பட்ட வங்கிகள் உள்ளன. இவ்வங்கிகளுக்கு இந்தியா உள்பட உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. இவற்றில் யு.பி.எஸ். ஏ.ஜி., மற்றும் கிரடிட் சுசே என்ற இரு வங்கிகள்தான் பெரியவை. அந்நாட்டின் சட்டப்பட்டி சுவிஸ் வங்கிகளில் உள்ள கணக்குகள் பரம ரகசியமானது. கணக்கு வைத்திருப்பவர்களைத் தவிர வேறு யாருக்கும் எந்த தகவலும் அளிக்கப்படுவதில்லை.

இரண்டாம் உலகப் போரின் போது, யூதர்களின் கணக்குகளை வங்கியிலிருந்து பெற்று அவர்களை அழிக்கும் முயற்சியில் ஜெர்மனியின் ஹிட்லர் ஈடுபட்டதால், வங்கிக் கணக்குகளை ரகசியம் ஆக்கும் சட்டத்தை 1934ம் ஆண்டு சுவிஸ் வங்கி கொண்டு வந்தது. அப்போது முதல் இன்று வரை, இந்த சட்டத்தின் படி கணக்கு வைத்திருப்பவரைத் தவிர, அவர் சார்ந்திருக்கும் நாடு அல்லது புலனாய்வு நிறுவனங்கள் கேட்டால்கூட தருவதில்லை. எண் அடிப்படையில் கணக்கு: சுவிஸ் வங்கிகளில் சிலருக்கு வங்கிக் கணக்கு பெயர் அடிப்படையில் அல்லாமல் எண் அடிப்படையில் வழங்கப்படும். அந்த எண்ணுக்கு உரியவரின் பெயரை கண்டுபிடிக்க வங்கியின் உயர் அதிகாரிகளால்தான் முடியும். ஆகவே வெறும் எண்ணை வைத்தே கணக்குகளை இயக்கி வருவோரும் உண்டு. இந்தியாவில் தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் வேட்பாளர், ஒருவேளை சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்தால் கூட, அந்த ரகசியம் யாருக்கும் தெரியாது என்பதால் அதை எளிதாக மறைத்துவிடும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற நடைமுறைகள் வரி ஏய்ப்புக்கு வழிவகுக்குகிறது என்று பெரும்பாலான நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், சுவிஸ் வங்கி கணக்குகளை வழங்கும்படி சுவிட்சர்லாந்து அரசிடம் அமெரிக்கா கேட்டது. வரி ஏய்ப்பிலிருந்து தப்பியவர்களை இதன்மூலம் எளிதில் மடக்கி வரி வசூலிக்க வேண்டும் என்பது அந்நாட்டின் திட்டம். இதே போன்று ஜெர்மனியும் கேட்டிருந்தது. 20 ஆயிரம் அமெரிக்கர்களின் ரகசிய கணக்குகளையும், 1400 ஜெர்மனியர் களின் ரகசிய கணக்குகளையும் சுவிஸ் அரசு அந்நாடுகளிடம் அளித்துள்ளது. ஜெர்மனியின் பட்டியலில் 600 பேர்தான் அந்நாட்டை சேர்ந்தவர்கள். அந்த பட்டியலில் இந்தியர்களின் பெயர்களும் இருப்பதாகவும், இந்தியா கேட்டால் தரத்தயார் என்றும் அந்நாடு கூறியிருக்கிறது.

அத்வானி கருத்து: இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அத்வானி, “ஜெர்மனியிடம் இந்தியர்களின் பெயர்களை கேட்க மத்திய நிதி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியும் கூட, நடவடிக்கை எடுக்கவில்லை’ என்றார். கடந்த ஓராண்டாகத்தான் கருப்புப் பண விவகாரம் சூடுபிடித்துள்ளது. அமெரிக் காவும் ஜெர்மனியும் முனைப்புக் காட்டும் இச்சமயத்தில்தான் மத்திய அரசு விழிப்பாக இருந்திருக்க வேண்டும். கடந்த ஏப்ரல் 2ல் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க லண்டன் சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங், கருப்புப்பணத்தை வெளிக்கொண்டு வருவதற்காக அங்கு நடந்த பேச்சு வார்த்தையில் மவுனம் சாதித்தார் என்றும் பா.ஜ., குற்றம்சாட்டுகிறது.

இந்தியப் பணம் மீண்டும் இந்தியாவுக்கே கொண்டுவரப்படுமானால், ஏறத்தாழ ரூ. 4 ஆயிரம் கோடி அளவுக்கு இந்தியாவுக்கு வரி வருவாய் கிடைக்கும். இந்த பணத்தை கொண்டு ஒவ்வொரு கிராமத்துக்கும் சுகாதாரமான குடிநீர், பள்ளிக்கூடங்கள், இன்டர்நெட் இணைப்பு வசதி கூட செய்து தர முடியும் என்றும் கூறப்படுகிறது. கருப்புப் பணத்தின் புதையலாக காட்சி அளிக்கும் இந்த பணத்தை கொண்டு வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இந்த கருப்புப்பணம் இந்தியாவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவும், குற்றச்செயல்களை தூண்டவும், பங்கு சந்தையை முடமாக்கவும்தான் பயன்படுகிறது என்ற அத்வானியின் கருத்து இத்தேர்தலில் முக்கிய இடம் பெற்றுவிட்டது.

இந்த பெயர்கள் வெளியானால் இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் பலரின் முகத்திரை கிழியும். நல்லவர்களாக நடிக்கும் பலரது வேஷம் கலையும். வி.ஐ.பி.,கள் குற்றவாளிகள் ஆவார்கள். எந்த நாடு அதிகம்… இந்தியா – ரூ.75 லட்சம் கோடி ரஷ்யா – ரூ.25 லட்சம் கோடி பிரிட்டன் – ரூ.20 லட்சம் கோடி உக்ரைன் – ரூ.5லட்சம் கோடி சீனா – ரூ. 4.8 லட்சம் கோடி.........

யார் கொன்றுவருவார்கள் இந்த பணத்தையெல்லாம் ...
இல்ல இந்த பணம் , கௌண்டமணி நம்ம வடக்குப்பட்டி ராமசாமிட்ட கொடுத்தது போல ஆகிடுமா!!!
உ ........ஊ   .............
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி : Gandhi Vellaichamy , உங்களுக்காக
  
 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------